தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் 9ம் தேதி வரை ஒத்திவைப்பு


தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் 9ம் தேதி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 6 Dec 2024 3:51 PM IST (Updated: 6 Dec 2024 5:49 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாக கூறி அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பதாக குறிப்பிடும் வகையில் கருப்பு மாஸ்க் அணிந்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அதன்படி மக்களவை வரும் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். அதன்படி மாநிலங்களவை வரும் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story