மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு - மத்திய மந்திரி தகவல்
மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் 'மகா கும்பமேளா' ஜனவரி 13-ந்தேதி(இன்று) தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டுள்ளது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 40 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகா கும்பமேளாவிற்காக கடந்த 3 ஆண்டுகளாக ரெயில்வே துறையில் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ரெயில்வே நிர்வாகத்தில் ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த தொகை செலவிடப்பட்டது. மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக புதிய ரெயில்வே வழித்தடங்கள், புதிய நடைமேடைகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. கங்கை நதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.