கேரளா பெயரை மாற்றக்கோரி சட்டசபையில் 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்


கேரளா பெயரை மாற்றக்கோரி சட்டசபையில் 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 24 Jun 2024 3:17 PM GMT (Updated: 25 Jun 2024 11:54 AM GMT)

அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவின் கீழ் கேரளம் என திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசை முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், கேரளா என்பதற்கு பதிலாக கேரளம் என மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் சட்டசபையில் முன்மொழியப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டன.

இதனால், தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேறியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்-மந்திரி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.

எனினும், இந்த முதல் தீர்மானத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் தேவையாக உள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 2-வது முறையாக கேரள சட்டசபையில் இன்று கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதனை கொண்டு வந்து முதல்-மந்திரி விஜயன் பேசும்போது, மலையாளத்தில் இந்த மாநிலம் கேரளம் என அழைக்கப்படுகிறது. அதனால், இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து, மலையாளம் பேசும் சமூகத்தினருக்காக ஒன்றிணைந்த ஒரு கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை உறுதியாக வெளிப்பட்டு வருகிறது.

ஆனால், அரசியல் சாசனத்தின் முதல் அட்டவணையில் நம்முடைய மாநில பெயர் கேரளா என எழுதப்பட்டு உள்ளது. அதனால், அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவின் கீழ் கேரளம் என திருத்தம் செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த சட்டசபை கேட்டு கொள்கிறது என பேசினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது என சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.


Next Story