இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்


இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
x

இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ரெயில்வே தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு என்றார்.

இது தொடர்பாக ரெயில்வே மந்திரி வைஷ்ணவ் கூறுகையில், ரெயில்வே பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி அதிக அளவில் கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக லாலு பிரசாத் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்தை விட தற்போது 90 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.

லாலு பிரசாத் காலத்தில் ஒரே ஆண்டில் 234 ரெயில் விபத்துகள், 464 முறை ரெயில்கள் தடம்புரண்டன. ஆண்டுக்கு 700 விபத்துகள் ஏற்பட்டன. மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஆண்டுக்கு 395 விபத்துகள் ஏற்பட்டன. மல்லிகார்ஜுன கார்கே ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஆண்டுக்கு 381 விபத்துகள் ஏற்பட்டன. பாதுகாப்பில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துகிறார். புதிய தொழில்நுட்பம், முதலீடுகளை ரெயில்வே துறைக்கு கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஆண்டுக்கு விபத்துகள் 30 ஆக குறைந்துள்ளது. ரெயில் தடம்புரளும் சம்பவம் 43 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துள்ளது.

2020ம் ஆண்டு முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு. 350 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு இந்தியாவில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதே தூர பயணத்திற்கு பாகிஸ்தானில் 436 ரூபாயும், இலங்கையில் 413 ரூபாயும், வங்காளதேசத்தில் 323 ரூபாயும் ரெயில் கட்டணமாக உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளில் ரெயில் கட்டணம் 5 மடங்கு உயர்வு' என்றார்.


Next Story