ராகுல், தேஜஸ்வி, அகிலேஷ் ஆகியோர் ‘இந்தியா’ கூட்டணியின் 3 குரங்குகள் - யோகி ஆதித்யநாத் விமர்சனம்

பீகாரின் சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு கோவில் கட்டப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ' மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கியோதி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மகாத்மா காந்தி கூறிய 3 குரங்குகள் தீமையான விஷயங்களை பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை, பேசுவதும் இல்லை. ஆனால் இப்போது, ‘இந்தியா’ கூட்டணியில் 3 குரங்குகள் உள்ளன. அது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஆகும்.
இதில் ராகுல் காந்தி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் செய்த எந்த நல்ல செயல்களையும் பார்க்கவில்லை, தேஜஸ்வி யாதவ் அது குறித்து எதுவும் கேட்கவில்லை, அதே போல் இது குறித்து யாராவது பேசினால் அகிலேஷ் யாதவ் அதை ஒப்புக்கொள்வது இல்லை.
பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் குற்றவாளிகளை அரவணைத்து, ஊடுருவல்காரர்களை அனுமதித்து, மாநிலத்தின் பாதுகாப்புடன் சமரசம் செய்து கொண்டன. சாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, கலவரங்களை தூண்டுபவர்கள் இவர்கள்தான். நாம் பிளவுபடவோ அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிடவோ மாட்டோம் என்று உறுதியேற்போம்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ரேஷன் கடைகள் சூறையாடப்பட்டன. இன்று, பீகாரில் உள்ளவர்கள் உட்பட 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை மாநிலத்தில் இருந்து விரட்டி, அவர்களின் செல்வத்தை ஏழைகளுக்கு மறுபகிர்வு செய்வோம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறிய வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளது. அதேபோல் இப்போது பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு கோவிலைக் கட்டி, ‘ராம் ஜானகி பாதை’ வழியாக அந்த கோவிலை அயோத்தியுடன் இணைப்போம்.”
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.






