ஒரு நாள் பயணமாக ரேபரேலி சென்றடைந்தார் ராகுல் காந்தி
ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார்.
லக்னோ,
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு ஒரு நாள் பயணமாக இன்று சென்றார்.
முன்னதாக, ராகுல் காந்தி சென்ற விமானம் பர்சத்கஞ்ச் விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் வானிலை காரணமாக அவர் லக்னோவில் தரையிறங்கினார். அங்கிருந்து சாலை வழியாக ரேபரேலியை சென்றடைந்தார்.
ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தியின் 2வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அமேதி தொகுதி எம்பி கிஷோரி லால் ஷர்மா ஆகியோருடன் ரேபரேலி மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதேபோல், எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார். மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனை தொடர்ந்து, கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களவை காப்பாற்றும்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னதாக அன்சுமான் சிங்குக்கு ஜனதிபதி திரவுபதி முர்மு கீர்த்தி சக்ரா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. பிறகு மாலை 5 மணிக்கு டெல்லி புறப்படுவார் என்று கட்சியின் மாவட்ட தலைவர் பங்கஜ் திவாரி தெரிவித்தார்.