இந்த சவாலான நேரத்தில் வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் இந்திய ராணுவம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, "வயநாட்டில் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சோகம். மீட்பு பணி மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சவாலான நேரத்தில் வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இந்த தருணத்தில் அம்மக்களுக்கு தேவையான ஆதரவையும், இயன்ற உதவிகளையும் நாம் வழங்குவது அவசியமானது.
இதுபோன்ற இயற்கை பேரிடர் வயநாட்டில் 2-வது முறையாக நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வயநாடு பகுதியில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை உள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபற்றி ஆய்வு செய்து, உயர் தொழில்நுட்ப தீர்வுகள் எவை இருந்தாலும் அதனை செயல்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.