ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல்காந்தி வாழ்த்து


ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
x

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், தலா 220 கிலோ எடை 2 செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டன. இதையடுத்து ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது.

விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் வெற்றி பற்றி குழுவினர் விரிவான தரவுகளை பகுப்பாய்வு செய்து வந்தனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், டாக்கிங் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. இது ஒரு வரலாற்று தருணம் என்றும் குறிப்பிட்டு உள்ளது. செயற்கைக்கோள்களை இணைத்த பின்னர், அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்பேடெக்சின் வரலாற்று வெற்றிக்காக இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மைல்கல் இந்தியாவின் திறன்களில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கிறது, இது அதிக விண்வெளி திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு வழி வகுக்கிறது. உங்களின் அர்ப்பணிப்பும் புதுமையும் தொடர்ந்து உலகை ஊக்குவிக்கிறது மற்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.


Next Story