எல்லையில் நீடிக்கும் போர் பதற்றம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலர் சந்திப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை செயலரை அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கு மத்தியில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் அரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.






