மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடலை குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். மேலும், இனி நடைபெறும் நீராடல் உள்ளிட்ட சடங்குகள் பாதுகாப்பாக நடைபெற மாநில அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் நீராட வேண்டும்.கங்கை அன்னை அனைவரையும் பாதுகாக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.