ரஷியாவில் பயங்கர நிலநடுக்கம்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா? - சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவல்

ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐதராபாத்,
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இன்று ரிக்டர் 8.7 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பானில் பசிபிக் கடற்கரையோரம் உள்ள நகரங்களில் 9 லட்சம் பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹோக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அச்சுறுத்தலால் ஜப்பானின் வடகிழக்கில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த நிலையில், ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஐதராபாத்தில் உள்ள இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்(ITEWC) வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட தரவுகள் கிடைக்கும்போது இது தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






