பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
புதுடெல்லி,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனைகள் என மொத்தம் 110 பேர் களமிறங்கினர். இதில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றது. இந்தநிலையில், சுதந்திர தினத்தன்று இன்று இந்திய ஆக்கி ஆண்கள் அணியினர், மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில், அமன் ஷெராவத் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார். அதேபோல், வெண்கலம் வென்ற ஆக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஆக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர். பின்னர் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.