2 நாள் பயணமாக குவைத் செல்கிறார் பிரதமர் மோடி


2 நாள் பயணமாக குவைத் செல்கிறார் பிரதமர் மோடி
x

FILEPIC

கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

புதுடெல்லி,

வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:-

வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 21- 22 ம் தேதிகளில் அரசுமுறை பயணாக குவைத் செல்கிறார்.

அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், குவைத் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார். பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இந்தியா- -குவைத் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார். வளைகுடா நாடுகளில் குவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சமீபத்தில் குவைத் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார். அப்போது தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

குவைத் நாட்டை பொறுத்தவரை இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி ஆகியவற்றை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தில் தங்கி பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். எனவே பிரதமர் மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.


Next Story