பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்; நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயில் அறிமுகம்


பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்; நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயில் அறிமுகம்
x

சோம்நாத்-ஆமதாபாத் இடையேயான வந்தே பாரத் ரெயிலையும் அவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.

காந்திநகர்,

குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தவுள்ளார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

இந்த பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயிலை கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் பற்றி குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்வி செய்தியாளர்களிடம் கூறும்போது, காந்திநகரின் மகாத்மா மந்திரில் நகர்ப்புற வளர்ச்சி ஆண்டுக்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

அவருடைய இந்த வருகையை தொடர்ந்து, மொத்தம் ரூ.82,500 கோடிக்கும் கூடுதலான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார் என கூறினார். பிரதமரின் இந்த பயணத்தின்போது, முதல் நாளான 26-ந்தேதி கச் மாவட்டத்துக்கு செல்கிறார். இதன்பின்னர் பூஜ் நகரில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

அவர் பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான 33 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கியும் வைக்க உள்ளார். இதேபோன்று, குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் பெறும் வகையில், ஆஷாபுரா தம் ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

கச் மாவட்டத்தில் அமைந்த இந்த ஆன்மிக மையத்தின் வளாகம், ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால், பக்தர்கள் கூடுதல் வசதியை பெறுவார்கள்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் குஜராத்துக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் தகோத், கரோத், வதோதரா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார். சோம்நாத்-ஆமதாபாத் இடையேயான வந்தே பாரத் ரெயிலையும் அவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். தகோத் நகரில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே உற்பத்தி பிரிவு ஒன்றையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

1 More update

Next Story