மத்திய அமைச்சகங்களுக்கான புதிய கர்தவ்ய பவன்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இன்னும் 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் முக்கிய பகுதியாக விளங்கிய ராஜபாதை பெயரை கடமை பாதை என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது. கடமை பாதை அருகே ‘கர்தவ்யா பவன்’கள் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் அரசு அலுவலகங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது.
டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் வடக்கு, தெற்கு வளாக கட்டிடங்களில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிற துறை அலுவலகங்கள் எல்லாம் ஒரே வளாகத்தில் அமைக்கப்படும் ‘கர்தவ்யா பவன்’களுக்கு மாற்றப்பட இருக்கின்றன. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடங்களை கட்டு வதற்கான திட்டங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொண்டது. 10 ‘கர்தவ்ய பவன்’களை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவற்றில் ஓர் அலுவலக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கர்தவ்யா பவன்-3 கட்டிடத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வெளியுறவுத்துறை மற்றும் ஊரக மேம்பாடு, மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் நிலவளத்துறை அமைச்சகங்கள் உள்பட பல அமைச்சகங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. இன்னும் 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






