நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த அனைத்தையும் செய்வோம் - பிரதமர் மோடி
படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இதே நாளில்தான் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OneRankOnePension) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கும் நமது படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு என்பது, நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது மாவீரர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பங்கள் இந்த முக்கிய முயற்சியால் பயனடைந்துள்ளனர் என்பது உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும். எண்களுக்கு அப்பால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது நமது ஆயுதப்படைகளின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம்
இவ்வாறு அதில் பிரதம்ர் மோடி பதிவிட்டுள்ளார்.