'நடுத்தர மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார்' - அமித்ஷா


நடுத்தர மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார் - அமித்ஷா
x

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்து வரும் 3-வது ஆட்சியில் முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். வரி குறைப்புக்கான நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றை சமஅளவில் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு வருவாய் ரூ.12 லட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது.

இந்நிலையில், 2025-26 மத்திய பட்ஜெட் என்பது வளர்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான மோடி அரசின் தொலைநோக்கு திட்டம் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார்.

12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை. இந்த வரி விலக்கு நடுத்தர வர்க்கத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த சந்தர்ப்பத்தில், அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், "பட்ஜெட் 2025 என்பது ஒவ்வொரு துறையிலும் வளர்ந்த மற்றும் மேன்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான மோடி அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் முன்னோட்டமாகும்.

விவசாயிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம், புதிய தொழில்கள் மற்றும் முதலீடு என அனைத்து துறைகளையும் இந்த பட்ஜெட் உள்ளடக்கியுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய, தொலைநோக்கு பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள்" என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story