அதானி விவகாரத்தில் மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன - ராகுல்காந்தி

ரஷியாவிடம் இருந்து எண்ணை கொள்முதலை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
புதுடெல்லி,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. எண்ணை இறக்குமதி செய்வதை நிறுத்தாததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கணிசமாக வரி உயர்த்தப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை இந்தியா முன்வைத்து தான் நிறுத்தியதாக தொடர்ந்து டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் பிரதமர் மோடி இதுவரை நேரடியாக டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிட்டு எந்த கருத்தையும் வெளியிடாமல் உள்ளார்.
இதுதொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வரும் நிலையில், மோடியை கடுமையாக விமர்சித்து இரு பதிவை பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது-
இந்தியர்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் அவரை எதிர்த்து பிரதமர் மோடியால் நிற்க முடியாததற்கு காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான். மோடி,ஏஏ (அம்பானி, அதானி) மற்றும் ரஷிய எண்ணை ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிவந்து விடும் என்ற அச்சுறுத்தலால் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன என அதில் பதிவிட்டுள்ளார்.






