விமான விபத்து; தாமாக முன்வந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சவுரவ் குமார் மற்றும் துருவ் சவுகான் ஆகிய இரண்டு டாக்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடித்ததில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விமானம் விழுந்து நொறுங்கிய பி.ஜே. மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் டாக்டர்கள் உட்பட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை மதிப்பீடு செய்து வழங்க, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு/ஐகோர்ட்டு நீதிபதிகள், விமான போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






