விமான விபத்து; 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்


விமான விபத்து; 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
x
தினத்தந்தி 14 Jun 2025 4:59 PM IST (Updated: 14 Jun 2025 5:00 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.ஏ. அறிக்கை வந்த பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்படுவதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

டி.என்.ஏ. மாதிரிகளின் பொருத்தத்தை கண்டறியும் பணியை விரைவுபடுத்துவது தொடர்பாக, குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி, மாநில தடயவியல் அறிவியல் ஆய்வக (எஃப்.எஸ்.எல்.) அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.என்.ஏ. பொருத்தத்தை கண்டறியும் பணிக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ. அறிக்கை வந்த பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story