சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார் - பவன் கல்யாண் ஆவேசம்


சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார் - பவன் கல்யாண்  ஆவேசம்
x
தினத்தந்தி 3 Oct 2024 9:08 PM IST (Updated: 4 Oct 2024 1:11 PM IST)
t-max-icont-min-icon

சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.

திருப்பதி,

கடந்த ஆண்டு செப்., மாதம் சென்னையில் நடந்த மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி பேசும்போது, 'மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ' என்று கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் சனாதன தர்மத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக பேச நீதிமன்றங்கள் பயப்படுகின்றன என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் தாக்குபவர்களை நீதிமன்றங்கள் பாதுகாக்கின்றன. சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதசார்பின்மை ஆகாது. அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர், வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார். சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதியை, ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மறைமுகமாக விமர்சித்துப் பேசி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story