உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளன..? அதிகமாக வைத்திருந்தால் சிறை - புதிய சட்டம் அமல்
தனிநபர் ஒருவரது பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் பலவற்றுக்கு தொலைபேசி சாதனமே காரணமாக இருக்கிறது. இதனால் தொலைபேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன்படி ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை தனது பெயரில் வைத்திருக்கலாம்.
இதனை மீறி ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்க தொலைத் தொடர்பு சட்டம்-2023 வழிவகை செய்கிறது. இதுவே அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்காடுகள் வரை மட்டுமே தங்களது பெயரில் வைத்திருக்க முடியும்.
வரையறைக்கும் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரமும், அதன்பிறகும் அந்த குற்றம் தொடருமானால் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவரை ஏமாற்றி அவர்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு பெறப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில் இந்த இரண்டுமே விதிக்கப்படலாம். மேலும் பயனரின் அனுமதியின்றி வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படலாம். இதுதவிர சட்டவிரோதமாக வயர்லஸ் கருவி வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம், தொலைதொடர்பு சேவைகளை தடுக்கக்கூடிய அங்கீகரிக்கப்படாத சாதனங்களை வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் போன்ற தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.