பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது - ராணுவ அதிகாரிகள்


பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது - ராணுவ அதிகாரிகள்
x
தினத்தந்தி 11 May 2025 6:47 PM IST (Updated: 11 May 2025 7:09 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

ஆனால் நேற்று இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. தொடர் தாக்குதல்களால் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், "பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "பயங்கரவாத இலக்குகள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு அடையாளம் காட்டப்பட்டன. பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது மிகச்சரியாக இலக்கை நோக்கி குறிவைத்தோம். வான் தாக்குதல்கள் மூலம் குறிவைக்கப்பட்ட இலக்குகளை அழித்தோம்.

முக்கிய பயங்கரவாதிகளாக இருந்த யூசுப் அசார், அப்துல் மாலிக் ஆகியோர் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சரியாக குறிவைத்து முரித்கே பயங்கரவாத பயிற்சி மையத்தில் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்களை இந்திய வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பு தடுத்தது. பயங்கரவாத முகாம்களை தவிர வேறு எந்த கட்டமைப்பையும் நாம் தாக்கவில்லை. பயங்கரவாத முகாம்களை நாம் தாக்கியதற்கு பதிலாக இந்திய மக்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆளில்லா விமானம், டிரோன்கள் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது.

நமது விமானப்படை தயாராக இருந்ததால் டிரோன் தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடக்கும்போதே பயணிகள் விமானங்கள் பறக்கவும் பாகிஸ்தான் அனுமதித்தது. பாகிஸ்தானில் உள்ள பஸ்ரூர் வான் பாதுகாப்பு ரேடார் இந்தியாவால் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்துள்ளது" என்று தெரிவித்தார். மேலும் இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் செயற்கைகோள் படங்களை ராணுவ அதிகாரிகள் வெளியிட்டனர்.

1 More update

Next Story