ஆபரேஷன் சிந்து; இஸ்ரேலில் இருந்தும் விரைவில் இந்தியர்கள் மீட்கப்படுவர்: மத்திய அரசு

விமானத்தில் இருந்து வெளியே வந்ததும் பாரத் மாதா கி ஜெய், இந்துஸ்தான் ஜிந்தாபாத் என இந்தியர்கள் முழக்கமிட்டனர்.
புதுடெல்லி,
ஈரான் நாடு அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறிய இஸ்ரேல் அதற்கு எதிராக திடீரென போரில் இறங்கியது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்டு உள்ளது. எனினும், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது. இந்திய சிறப்பு விமானங்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மாணவர்கள், புனித யாத்திரை சென்றவர்கள் உள்பட 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து 3-வது சிறப்பு விமானத்தில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்திறங்கிய அவர்களை மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி வரவேற்றார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி கூறும்போது, 290 இந்தியர்களை சுமந்து கொண்டு ஈரானில் இருந்து வந்த 3-வது சிறப்பு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. இதில், 190 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். டெல்லி, அரியானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
நமக்காக ஈரான் அரசு தன்னுடைய வான்வெளியை திறந்து, இந்தியர்கள் செல்ல அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இது காட்டுகிறது. ஆபரேஷன் சிந்து விமானங்கள் இஸ்ரேலில் இருந்தும் விரைவில் சொந்த நாட்டுக்கு வந்து சேரும் என்று அவர் கூறியுள்ளார். இதனால், இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.
சொந்த நாடு திரும்பிய இந்தியர்கள் பிரதமர் மோடிக்கும், மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர். விமானத்தில் இருந்து வெளியே வந்ததும் பாரத் மாதா கி ஜெய், இந்துஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர்.






