ஆன்லைன் முன்பதிவு நிறைவு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்


ஆன்லைன் முன்பதிவு நிறைவு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்
x

ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்ததை அடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அய்யப்பன் கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் வருகிற 26-ந் தேதி மண்டல பூஜை நாள் வரை முன்பதிவு நிறைவடைந்து விட்டது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் உடனடி தரிசன முன்பதிவுக்கு தினசரி 10 ஆயிரம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சராசரியாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாடுகளை தளர்த்தி கூடுதல் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. நேற்று 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சபரிமலையில் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இதனிடையே சபரிமலை நடப்பு சீசனில் கடந்த 5-ந்தேதி வரை 20 நாட்களில் அப்பம், அரவணை மொத்த வருவாய் ரூ.60 கோடியே 54 லட்சத்து 95 ஆயிரத்து 40 கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலமாக ரூ.54 கோடியே 37 லட்சத்து ஐநூறும், அப்பம் விற்பனை மூலம் ரூ.6 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 540-ம் கிடைத்துள்ளது என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.18 கோடியே 34 லட்சத்து 79 ஆயிரத்து 455 அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story