டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் ஒடிசா சிறுமி

70 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் பயபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று காலை தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிறுமியை 3 இளைஞர்கள் இடைமறித்தனர்.
மேலும், தாங்கள் கொண்டுவந்த மண்ணெண்ணெயை சிறுமியின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, உடல் முழுவதும் தீப்பற்றியதில் அலறி துடித்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த கிராமத்தினர் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் சிறுமிக்கு தீ வைத்த 3 இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து, 70 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை கிராமத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்கள் தீவிரமாக இருந்ததையடுத்து மேல்சிகிச்சைக்காக சிறுமி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். இதற்காக புவனேஷ்வரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.
இதற்காக சிறுமி ஆம்புலன்சில் புவனேஷ்வர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளார்.






