தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று ரஷியா பயணம்


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று ரஷியா பயணம்
x
தினத்தந்தி 10 Sept 2024 8:15 AM IST (Updated: 10 Sept 2024 12:45 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று செவ்வாய்க்கிழமை) மாஸ்கோ செல்ல இருக்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, ரஷியா, உக்ரைனுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டார். அப்போது ராஜ்ய ரீதியிலும், பேச்சுவார்த்தையின் மூலமும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும், நண்பர் என்ற அடிப்படையில் தனிப்பட்ட முறையில் ரஷியாவுடன் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் செய்து உதவ தயராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, அஜித் தோவல் அடுத்த மாதம் மாஸ்கோ வர இருப்பதாகவும், அப்போது அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்வார் என்றும்மோடி கூறியிருந்தார்.

இதனிடையே உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த ரஷிய அதிபர் புதின், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று புதின் அறிவித்தார். இதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் இன்று (செவ்வாய்க்கிழமை) ரஷியா செல்ல இருக்கிறார். ரஷியாவில் இரண்டு நாட்கள் தங்கும் அஜித் தோவல் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச உள்ளார். அப்போது ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் அஜித் தோவல் விவாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Next Story