கும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை: வெளியான முக்கிய தகவல்


கும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை: வெளியான முக்கிய தகவல்
x

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறும் கும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை என ரெயில்வே விளக்கம் அளித்து உள்ளது.

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மகா கும்பமேளா 2025 தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் ரெயிலில் பயணம் செய்வார்கள். அவர்கள் ரெயில்களில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இதனை ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கும்ப மேளாவுக்கு செல்லும் பயணிகள் ரெயில்களில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை அறிந்தோம். இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றதும், தவறாக வழிநடத்தும் செய்தியாகும். சரியான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது இந்திய ரெயில்வேயின் விதிமுறைகளின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

மகா கும்ப மேளா அல்லது வேறு எந்த நிகழ்ச்சியின் போதும் இலவசப் பயணத்திற்கான வழிமுறைகள் ரெயில்வேயில் இல்லை. அதேநேரம் கும்ப மேளாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தடையற்ற பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ரெயில்வே உறுதிபூண்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு தங்கும் வசதிகள், கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளிட்ட தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது" என்று அதில் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த திங்களன்று, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பிரயாக்ராஜில் 'மகாகும்பமேளா' செல்லும் வாகனங்களுக்கு கட்டணமில்லா பயணத்தை வழங்க எந்த ஏற்பாடும் இல்லை " என்று தெரிவித்திருந்தது. முன்னதாக பிரயாக்ராஜில் தேசிய நெடுஞ்சாலைகளில் கும்பமேளா செல்லும் வாகனங்களுக்கு கட்டணமில்லா பாதை வழங்கப்படும் என்று தகவல்கள் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story