லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு


லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
x

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் தேடப்பட்டு வருகிறார்.

புதுடெல்லி,

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே, துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் மும்பை போலீசார் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக, கடந்த அக்டோபர் 14-ம் தேதி, மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை, அவரது மகன் சிஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே இரவு மூன்று பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.

இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவலை தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் இரண்டு குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.


Next Story