டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் - கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி


டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் - கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
x

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் 70 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 100, முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திகள் ஆகியோருக்கு மதிப்பூதியமாக மாதம்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், "இதற்கு முன் நான் அறிவித்த பெண்களுக்கு மரியாதை திட்டம், சஞ்சீவனி திட்டம் ஆகியவற்றை நிறுத்த முயற்சித்தது போல், அர்ச்சகர்கள் மற்றும் கிராந்திகளுக்கான இந்த திட்டத்தையும் நிறுத்த பா.ஜனதா முயற்சிக்க வேண்டாம்" என்றார்.


Next Story