நீட் முறைகேடு விவகாரம்: ராகுல் காந்தி - மத்திய மந்திரி இடையே காரசார விவாதம்


நீட் முறைகேடு விவகாரம்: ராகுல் காந்தி - மத்திய மந்திரி இடையே காரசார விவாதம்
x
தினத்தந்தி 22 July 2024 12:54 PM IST (Updated: 22 July 2024 3:24 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள், மத்திய மந்திரி இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

நீட் முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "பணம் இருந்தால் போதும்; இந்திய தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி . நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்சினை உள்ளது.

நீட் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும், தேர்வு முறைகளில் சிக்கல் உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். இந்த பிரச்சினையின் அடிப்படையை அவர் புரிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "மத்திய அரசு, தேர்வு வினாத்தாள் கசிவில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள், மறுபக்கம் விசாரணையில் பல உண்மைகள் வெளியாகி பலரும் கைதாகி வருகிறார்கள். தர்மேந்திர பிரதான் மந்திரியாக நீடித்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றும்" கூறினார்.

இதற்கு பதிலளித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தபோது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும். தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காது என அரசு உறுதியளிக்கிறது.

5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர். 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது. மக்களவையில் நீங்கள் கத்துவதால், அது உண்மையாகிவிடாது, நாட்டின் தேர்வு முறையே ஒரு மோசடி என்று கூறியிருக்கிறீர்கள், மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மிக மோசமான தகவலில் இதுதான் அதிகபட்சமாக இருக்கும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


Next Story