புதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2024 4:45 AM GMT (Updated: 2 Aug 2024 5:28 AM GMT)

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

உள்நாட்டு நிதி வருவாய் ரூ.6,914 கோடி. மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடி. நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2,066 கோடி கடன் வாங்க அனுமதி. காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்.

புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும். புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பாடப்பிரிவு வாரியாக 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story