தமிழ்நாடு, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் - அமித்ஷா

கோப்புப்படம்
தமிழ்நாட்டில் ஊழலை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்புவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வரவிருக்கும் தமிழ்நாடு, பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்று மத்திய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்குகள் குறைந்தது. பிரதமர் மோடிக்கு அதிக வாக்குகள் கிடைக்காதது குறித்து வாக்காளர்கள் வருந்தினர். எனவே அரியானா, டெல்லி தேர்தலில் அவர்கள் அதிகமாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்.
அதைப்போல பீகார் மற்றும் தமிழ்நாட்டிலும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறும். தொகுதி மறுசீரமைப்பில் இமாசல பிரதேசத்திலோ அல்லது இந்தியா கூட்டணி ஆளும் எந்த மாநிலத்திலோ ஏதாவது நடந்திருக்கிறதா? தொகுதி மறுசீரமைப்பு கமிஷனோ அல்லது அதற்காக நீதிபதியையோ அரசு அறிவித்து இருக்கிறதா?
தமிழ்நாட்டில் ஊழலை மறைக்கவே இந்த பிரச்சினையை எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பில் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது என்றும், விகிதாச்சாரப்படி அவர்கள் தொகுதிகளை பெறுவார்கள் என்றும் தென் இந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். இது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். நமது வேர்கள் மற்றும் வரலாற்றுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அனைத்து மொழி மாணவர்களிடமும் இந்தி மற்றும் ஆங்கிலத்தை காங்கிரஸ்தான் திணித்தது.
ஆனால் பிராந்திய மொழிகளிலேயே தேர்வு எழுதுவதை நாங்கள் உறுதிசெய்தோம். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே படிக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.