'தேசிய தேர்வு முகமை இனி உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும்' - மத்திய கல்வி மந்திரி
இனி உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே தேசிய தேர்வு முகமை நடத்தும் என மத்திய கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக அடுத்தடுத்து பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
அதோடு, நீட் உள்ளிட்ட தேர்வுகளை டிஜிட்டல் முறையில் கணினி சார்ந்து நடத்துவதா? அல்லது எழுத்துத் தேர்வாக நடத்துவதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை(N.T.A.) இனி உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தேசிய தேர்வு முகமை இனி உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்துவதற்கு வரையறுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் எந்த அரசு பணிகளுக்கான தேர்வுகளையும் நடத்தாது. பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)-UG வருடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தப்படும்.
எதிர்காலத்தில் கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025-ல் தேசிய தேர்வு முகமை மறுசீரமைக்கப்படும். குறைந்தது பத்து புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, முறைகேடுகள் இல்லாத தேர்வு முறையை உறுதிசெய்ய தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்று தெரிவித்தார்.