நரேந்திர மோடியின் அரசியல் பயணம்... ஒரு சிறப்பு பார்வை


நரேந்திர மோடியின் அரசியல் பயணம்... ஒரு சிறப்பு பார்வை
x
தினத்தந்தி 9 Jun 2024 9:14 AM GMT (Updated: 9 Jun 2024 9:50 AM GMT)

மக்களுடன் இருப்பது, அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை நீக்குவது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நரேந்திர மோடிக்கு திருப்தி அளிக்காது.

புதுடெல்லி,

நரேந்திர மோடி மே 26, 2014 அன்று முதல் முறையாக இந்தியாவின் 16-வது பிரதமராக பதவி ஏற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார்.

குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் செப்டம்பர் 17, 1950 ஆம் ஆண்டு பிறந்தார் நரேந்திர மோடி. சுமாரான வசதியும், சாதாரணப் பின்னணியும் கொண்ட குடும்பத்தில் மோடி பிறந்திருந்தாலும் அவருடையது அன்பான குடும்பம். அவருடைய இளம் வயதில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்ததால் அவருக்கு உழைப்பின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. இதுவே அவருக்கு மக்கள் மற்றும் நாட்டின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொள்வதற்கு தூண்டு கோலாக இருந்தது. தன்னுடைய ஆரம்பக் கல்வியை 'வட்நகரில்' உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி , பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரெயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார்.

எட்டு வயதிலேயெ, 'ஆர்.எஸ்.எஸ்' என அழைக்கப்படும் 'தேசிய தொண்டர் அணியில்' உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறுவயதிலேயே 'ஆர்.எஸ்.எஸ்-ல்' தன்னை இணைத்துக்கொண்ட மோடி , 'அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடிக்கு பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. மோடியின் அயராத உழைப்பையும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிற கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். 'ஆர்.எஸ்.எஸ்-ன்' தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார். குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ம் ஆண்டு 'குஜராத்' மற்றும் 'இமாசலப் பிரதேச' தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி , வெகு விரைவில், 'இமாசலப் பிரதேசம்', 'பஞ்சாப்', 'அரியானா', 'சண்டிகார்', மற்றும் 'ஜம்மு காஷ்மீர்' போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, 'பாரதிய ஜனதா கட்சியின்' பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1998 -ம் ஆண்டு 'அடல் பிஹாரி வாஜ்பாய்' பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு 'தேசிய செயலாளர்' பதவி வழங்கப்பட்டது. தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி, 2001 ம் ஆண்டு அக்டோபர் 6 ம் தேதி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்த 'கேசுபாய் பட்டேல்' ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 'பாரதிய ஜனதா கட்சியின்' தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ம் தேதி குஜராத் மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார். பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பிப்ரவரி 27, 2002 -ம் ஆண்டு நடந்த "கோத்ரா ரெயில் எரிப்பு" சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும், அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

பின்னர், 2007 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்றுவிடாமல், நரேந்திர மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 -ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார். மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி , சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார்.

இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க, "குட்கா" என்னும் போதைப்பொருட்களுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

விருதுகளும், மரியாதைகளும்

2006: ''இந்தியா டுடே' நாளிதழ் இந்தியாவின் 'சிறந்த முதல்வர்' என்ற விருதை வழங்கி கவுரவித்தது.

குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக 'கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா' என்ற அமைப்பு 'இ-ரத்னா' விருதை வழங்கி கவுரவித்தது.

2009: ஆசியாவின் சிறந்த 'எப்.டி.ஐ பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012: 'டைம்' பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் 'சிறந்த அரசியல்வாதிகளில்' ஒருவராக சித்தரிக்கப்பட்டார். நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியது.

நில நடுக்கத்தின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் நிலையில் இருந்த குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் வளர்ச்சிக்காக வலிமையான பங்களிப்பை வழங்கும் வகையில் இவர் இம்மாநிலத்தை மாற்றினார். மக்களின் தலைவரான நரேந்திர மோடி மக்கள் பிரச்சினைகளை சரி செய்யவும் அவர்களின் நலனை மேம்படுத்தவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். மக்களுடன் இருப்பது, அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை நீக்குவது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு திருப்தி அளிக்காது.

அவர் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதைத் தவிர இணைய தளத்திலும் வலுவான மக்கள் தொடர்பை கொண்டுள்ளார். இந்தியாவின் தொழில்நுட்ப விரும்பியாக அறியப்படும் தலைவர் இவர். மக்களை இணையதளம் மூலம் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரவே தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், சவுண்டு கிளவுட், லிங்கிடு-இன், வைபோ மற்றும் பிற சமூக வலைதளங்களை வெகுவாக பயன்படுத்துகிறார்.

அரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார். பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடைய நாளை யோகாவுடன் ஆரம்பிக்கிறார். பிரதமர் மோடி மே 2014ல் பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் அனைத்துவிதமான வளர்ச்சி கொண்ட பயணத்திற்காக வழிவகுத்தார். வரிசையில் உள்ள கடைசி நபரும் பயன்பெறும் வகையில் சேவை புரிய வேண்டும் என்ற அந்தோதையா கொள்கையைப் பிரதமர் கொண்டு வந்தார்.

2014ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் "தூய்மையான இந்தியா" இயக்கத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாவது முறை அரசு அமைந்தபோது, சில அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார்.

அவற்றில் முத்தலாக் மசோதா கொண்டுவந்தது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பொதுத்துறை வங்கிகளை 12 ஆக குறைத்தது, ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி, குடியுரிமை திருத்த சட்டம்,பெண்களுக்கான இடஒதுக்கீடு, நாடாளுமன்றத்தில் அவர்களின் பங்கேற்பை மேம்படுத்துதல், புதிய நாடாளுமன்றம் திறப்பு ஆகியவை மிக முக்கியமானவை.

மேலும் நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக மோடி அரசு தனித்துவமான வகையில் பிரதமர் விவசாயிகள் திட்டம் ஒன்றை தொடங்கி இதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் ரூ. 6,000 நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 14.5 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.

நரேந்திர மோடியின் சர்வதேசக் கொள்கை நடவடிக்கைகள் உலக அரங்கில், மிகப் பெரிய குடியாட்சியின் பங்கையும் இந்தியாவின் திறனையும் நிரூபித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு பிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 18-வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறும் வண்ணமயமான நிகழ்வில், நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கும் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.


Next Story