மும்பை பயங்கரவாத தாக்குதல்: நாடு கடத்தப்பட்ட ராணாவை டெல்லியில் கைது செய்த என்.ஐ.ஏ.


மும்பை பயங்கரவாத தாக்குதல்: நாடு கடத்தப்பட்ட ராணாவை டெல்லியில் கைது செய்த என்.ஐ.ஏ.
x

டெல்லியில் விமானத்தில் வந்து இறங்கியதும், தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிந்து, ராணாவை என்.ஐ.ஏ. புலனாய்வு குழு கைது செய்தது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 238 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானிய வம்சாவளியான கனடா நாட்டை சேர்ந்த தொழிலதிபரான தஹாவூர் உசைன் ராணா (வயது 63) முக்கிய புள்ளியாக செயல்பட்டு உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் வைத்து அவரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார். ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு எதிராக ராணா சார்பில், கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும் ராணாவின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.

இதனை தொடர்ந்து ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியது. இதன்படி, மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட உசைன் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை வந்திறங்கினார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.

அவரை தேசிய பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றில் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வந்தனர். விமானத்தில் இருந்து இறங்கியதும், தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிந்து, ராணாவை என்.ஐ.ஏ. புலனாய்வு குழு கைது செய்தது.

1 More update

Next Story