செல்போன்- வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பா..? மும்பையில் கிளம்பிய புரளி.. தேர்தல் அதிகாரி விளக்கம்


mobile phone EVM link false news
x
தினத்தந்தி 16 Jun 2024 2:46 PM GMT (Updated: 16 Jun 2024 2:54 PM GMT)

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போன் பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மறுப்பு தெரிவித்தார்.

மும்பை:

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மராட்டிய மாநிலம் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைகர், 48 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் வேட்பாளர் அமோல் கஜனன் கீர்த்திகரை தோற்கடித்தார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் வைகரின் மைத்துனர் மங்கேஷ் பண்டில்கர், வாக்கு எண்ணிக்கையின்போது, கோரேகானில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடையை மீறி செல்போன் பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மங்கேஷ் பண்டில்கர் தொடர்பாக ஒரு நாளிதழில் வெளியான செய்தியில், வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போனை பயன்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து விவாதம் நீடிக்கும் நிலையில், இந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போன் பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வந்தனா சூரியவன்ஷி மறுப்பு தெரிவித்தார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தனி அமைப்பு. அதனை அன்லாக் செய்வதற்கு செல்போனுக்கு ஓ.டி.பி. எதுவும் அனுப்ப முடியாது. அதன் புரோகிராமை மாற்றியமைக்க முடியாது. எந்த வயர்லெஸ் தகவல் தொடர்பு வசதிகளும் இல்லாதது. அவதூறு மற்றும் பொய்யான செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.


Next Story