சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு


சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்:  குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 16 Jan 2025 6:29 PM IST (Updated: 16 Jan 2025 6:30 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மும்பை,

மும்பை பந்த்ராவில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதி வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சயிப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான். இதனை கவனித்த நடிகர் சயிப் அலிகான், அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அவரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதில், முதுகு தண்டுவடம், மார்பு உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 இடங்களில் கத்தி ஆழமாக கிழித்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சூழலில், சயிப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாகவும், சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதிகாலை 2.33 மணிக்கு சயிப் அலிகான் வீட்டு படிக்கட்டுகள் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்தபோது பதிவான புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், சத்குருவ ஷரன் கட்டிடத்தில் உள்ள நடிகரின் 12வது மாடி குடியிருப்பில் ஊடுருவியவர் வலுக்கட்டாயமாக நுழையவில்லை என்றும், இரவில் முன்னதாகவே பதுங்கிச் சென்றிருக்கலாம் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.


Next Story