மும்பை: ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 2பேர் கைது

மும்பையில் 5.4 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மும்பை மாநிலம் தாதரில் உள்ள பிரபல கோவிலுக்கு அருகில் தனியார் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த சொகுசு விடுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை சொகுசு விடுதியில் போலீசார் மறைந்திருந்து குற்றவாளிகளுக்கு பொறிவைத்து காத்திருந்தனர்.
சொகுசு விடுதிக்கு இரண்டு மர்ம நபர்கள் இரவு நேரத்தில் போதைப்பொருளுடன் வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசாரை அதில் ஒருவர் பார்த்துவிட்டார். இதனால் தப்பிக்க இருவரும் முயற்சி செய்தனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து 5.4 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.08 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மும்பை கோவண்டியைச் சேர்ந்த ஜஹாங்கிர் ஷாஹா ஆலம் ஷேக் (29) மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த செனால ஜூலம் சேக் (28) என அடையாளம் காணப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து இந்த கடத்தலுக்கு தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.






