மும்பை பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு


மும்பை பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
x

மும்பையில் கடந்த வாரம் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் கடந்த 10ம் தேதி மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோடியது. இதில் 7 பேர் பலியாகினர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தையடுத்து பஸ் டிரைவர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார். பஸ்சில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார். ஆனால், பஸ் விபத்தை நேரில் பார்த்தவர்களோ டிரைவர் போதையில் இருந்தார் எனத் தெரிவித்தனர். இந்தவிபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சியோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஸ்லு ரகுமான் (55) என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story