ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் 'துப்பட்டா' சிக்கி பெண் பலி


ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
x

File image

மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவுக்கூடத்தில் உள்ள எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ளார்.

உஜ்ஜைன்,

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உணவுக்கூடத்தில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலை கோவிலின் உணவுக்கூடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ரஜ்னி காத்ரி (வயது 30) என்ற பெண்ணின் துப்பட்டா உருளைக்கிழக்கு உரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் துப்பட்டா கழுத்தை இறுக்கி உயிருக்கு போராடிய நிலையில் மயங்கியுள்ளார். இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அந்த எந்திரத்தை நிறுத்தினார்கள், பின்னர் அவரை அந்த எந்திரத்திலிருந்து மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் பணியாற்றிய உணவுக்கூடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story