மராட்டியம்: முதல்-மந்திரியாக பட்னாவிஸ், துணை முதல்-மந்திரிகளாக ஷிண்டே, அஜித் பவார் இன்று பதவியேற்பு
மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் கடந்த நவம்பர் 23-ந்தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களை பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியிருந்தது. தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 57 மற்றும் 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்த தேர்தலில், மகா விகாஸ் அகாடி கூட்டணியானது படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) 20 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) 10 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.
இந்த சூழலில், முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க.வுக்கு வழங்க கூட்டணி கட்சி தலைவர்கள் ஒப்பு கொண்டனர். இதனை தொடர்ந்து, மராட்டிய பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, முதல்-மந்திரியாக இன்று பதவியேற்க உள்ளார்.
இதற்காக கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை, கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று நேரில் சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், ஆட்சியமைக்க நேற்று உரிமை கோரினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்னாவிஸ், பிரதமர் மோடி முன்னிலையில், நாளை (5-ந்தேதி) மாலை 5.30 மணியளவில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும். இதில், யாரெல்லாம் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றி நாளை (5-ந்தேதி) மாலை நாங்கள் முடிவு செய்வோம்.
ஏக்நாத் ஷிண்டேவை நேற்று நான் நேரில் சந்தித்தேன். இந்த அரசில் அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என்பது மகாயுதி தொண்டர்களின் விருப்பம். அவர் எங்களுடன் இருப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மராட்டிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மகாயுதி அரசு நிறைவேற்றும் என பட்னாவிஸ் கூறினார்.
இந்த சூழலில், மராட்டியத்தில் முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்று கொள்கிறார். அவருடன் புதிய மந்திரி சபையில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்று கொள்கின்றனர்.
மும்பையிலுள்ள ஆசாத் மைதான் பகுதியில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. நிகழ்ச்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள முதல்-மந்திரிகள் மற்றும் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.