மராட்டிய சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட பா.ஜ.க. திட்டம்


மராட்டிய சட்டசபை தேர்தல்:  வேட்பாளர்கள் பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட பா.ஜ.க. திட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2024 5:38 AM IST (Updated: 17 Oct 2024 5:59 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

புதுடெல்லி,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நவம்பர் 20-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந்தேதி நடைபெறும்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில், 100 இடங்களில் போட்டியிடுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மகாயுதி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு, மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி முடிவு செய்யும்.

இந்த கூட்டணி, பா.ஜ.க., அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கி உள்ளது. 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி, கூட்டணி கட்சி தலைவர்களுடன், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதன்பின்னர், ஒரு வாரத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதில், 150-க்கும் கூடுதலான இடங்களில் பா.ஜ.க. போட்டியிட கூடும் என்றும் சிவசேனா 80 முதல் 85 இடங்களிலும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 இடங்களிலும் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story