கொல்கத்தாவின் புதிய போலீஸ் கமிஷனராக மனோஜ் வெர்மா நியமனம்
மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவ மாணவர்கள் நேற்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் என்ற அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பயிற்சி மருத்துவர்களின் ஐந்து கோரிக்கைகளில் மூன்றினை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மம்தா - பயிற்சி மருத்துவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினித் கோயல், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதாரப் பணிகள் இயக்குநர் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து கொல்கத்தாவின் புதிய போலீஸ் கமிஷனராக மனோர்ஜ் குகார் வெர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மனோஜ் குமார் வெர்மா 1998-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.