மணிப்பூர்: பெண் விவசாயிகள் மீது குகி பயங்கரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் காயம்


மணிப்பூர்:  பெண் விவசாயிகள் மீது குகி பயங்கரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் காயம்
x

மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், தடுக்க சென்ற வீரர் ஒருவரின் இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் சனாசபி லம்பக் பகுதியில் பெண் விவசாயிகள் மீது குகி பயங்கரவாதிகள் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அந்த பெண்கள் சென்று மறைந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, மணிப்பூர் போலீசார் மற்றும் மஹர் ரெஜிமன்ட் படை பிரிவை சேர்ந்த வீரர்கள் இணைந்து, அவர்களை தடுக்க சென்றனர்.

குகி பயங்கரவாதிகள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், வீரர் ஒருவர் காயம் அடைந்து உள்ளார். இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை குகி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.

சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் ஊருக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலருடைய வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

அந்த பகுதியில் குகி-ஜோ சமூகத்துடன் தொடர்புடைய மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இதில் மார் சமூக பெண்ணான ஜொசாங்கிம் (வயது 31) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். வன்முறையில் உயிரிழந்த ஜொசாங்கிம் அந்த பகுதியில் உள்ள ஹெர்மோன் டியூ ஆங்கில ஜூனியர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதுபற்றி அவருடைய கணவர் குர்தன்சாங் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஆயுதங்களுடன் வந்த மெய்தி பயங்கரவாத குழுவை சேர்ந்த சிலர், அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இரவு 9 மணியளவில் உயிருடன் தீ வைத்து கொளுத்தி விட்டனர்.

அவர்களுடைய வீட்டில் வைத்து நடந்த இந்த சம்பவத்திற்கு பின்னர், அந்த குழுவினர், வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது என எப்.ஐ.ஆரில் தெரிவித்து உள்ளார். மர்ம கும்பல், வீட்டுக்கு தீ வைத்து தப்பி செல்லும் வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த சூழலில், குகி பயங்கரவாதிகள் மணிப்பூரில் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பெண் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


Next Story