மணிப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொலை: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
இம்பால்,
மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொடூரமான முறையில் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் நிவாரணம் மற்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பயங்கரவாத செயல் நமது மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதலாகும். மேலும் தொழிலாளர்களை இழந்து துயருற்றிருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.