யூ-டர்ன் எடுப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் கைது

கோப்புப்படம்
யூ-டர்ன் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத்தில் யூ-டர்ன் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டில் வசிக்கும் ஜெயேஷ்பாய் என்பவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் தங்குவதற்காக சூரத்துக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரை ஓட்டி வந்தனர். அவர்களை பாரத்பாய் கண்டித்துள்ளார்.
இதற்கு அந்த சிறுவர்கள் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டினர். இதில் ஆத்திரமடைந்த ஜெயேஷ்பாய் சிறுவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்து, யூ-டர்ன் எடுத்து சரியான பாதையில் செல்லுமாறு கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் வழியில் சென்றனர். அவர்களை சிறுவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.
சிறுவர்களில் ஒருவர், ஜெயேஷ்பாயின் முதுகில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர்.