ஆர்.டி.ஓ அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

கோப்புப்படம்
ஆர்.டி.ஓ அதிகாரி என கூறி ரூ. 12,500-ஐ ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு சம்பவத்தன்று மொபைலுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தான் ஒரு ஆர்.டி.ஓ அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் உங்களின் வணிக வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள சலான்களை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லை என்றால் வாகனத்தின் உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என மிரட்டினார்.
இதைக்கேட்ட பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த மோசடி நபர் செலுத்த வேண்டிய ரூ. 12,500ஐ ஆன்லைனில் செலுத்தும் படி கட்டாயப்படுத்தினார். இதனால் பயந்து போன 38 வயது நபர் உடனடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தினார். பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி செய்தவரின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் அழைப்புகள் மூலம் மோசடி நபரை கண்டுபிடித்தனர். மோசடியில் ஈடுபட்டது ஆஷிஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இவர், காசியாபாத் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒரு தனியார் முகவராக முன்பு பணியாற்றியதாகவும், அங்கு பாதுகாப்பற்ற பகுதியில் சேமித்து வைக்கப்படிருந்த பழைய வாகனப் பதிவு கோப்புகளை பயண்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
மேலும் இவர் தன்னை ஒரு அதிகாரி என நம்பவைக்க தனது சுயவிவரங்கள் மற்றும் அதிகாரி படங்களையும் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் மோசடி நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.