இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது - மம்தா பானர்ஜி அறிவிப்பு
ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
தொடர்ந்து 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது. ஆனால் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.
இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் வருகிற 1-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை ஆலோசித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு எடுக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து முன்பே என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 1-ம் தேதி மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப் மற்றும் உ.பி.யிலும் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்களிக்க வரிசையில் நிற்பவர்கள் இரவு 10 மணிக்கு வாக்களிக்கலாம். நாம் எப்படி இதை விட்டுட்டு செல்ல முடியும்.
மேற்கு வங்காளத்தில் 7-ம் கட்ட தேர்தல் முக்கியமானது. கொல்கத்தாவின் தொகுதிகள் உள்பட 9 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 2019ல் இந்த ஒன்பது தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். மறுபுறம் எங்கள் மாநிலத்தை 'ராமெல்' புயல் தாக்கியுள்ளது. நீங்கள் அங்கே ஒரு சந்திப்பை நடத்துகிறீர்கள். ஆனால் என் இதயம் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு தங்குமிடம், உணவு கொடுக்க வேண்டும்.
இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்கப் போவதில்லை. கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 1-இல் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.