இந்தியா கூட்டணியில் பிளவு? உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக உத்தவ் கட்சி அறிவிப்பு
மராட்டியத்தில் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மும்பை,
மகராஷ்டிர மாநிலத்தில் இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை ஒன்றாக சந்தித்தன. சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்தன.
மாநிலத்தில் விரைவில் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தனித்து போட்டியிடும் என அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி கூட்டம் ஒன்று கூட நடக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை கூட நியமிக்க முடியவில்லை. அது நல்லதல்ல. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டால், அது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நாங்கள் எங்கள் பலத்தின் அடிப்படையில் போட்டியிடுவோம்" என்றார்.
மராட்டிய சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும் தனியாக போட்டி என அறிவிக்க தொடங்கியுள்ன. இது இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் வகையில் இருப்பதாக மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.